யோகம்

யோகம் என்றால் ஒன்றி இருத்தல் எனப் பொருள். மன்மனம் எங்குண்டு வாயு அங்குண்டு. அசைந்து கொண்டே இருப்பது வாயுவின் செயல். அவ்வாறே மனமும் அசைந்து கொண்டே இருக்கும். நினைக்கும் மனம் நினைப்பற்ற பொழுது அகப்பொருளைச் சிந்திக்கும். அகப்பொருளான சிவ ஒளியோடு கலந்திருப்பார்களுக்கு மனமும், பிராணமும் அடங்கி விடும். மனதற்ற நிலையில் இறை அனுபவம் அனைத்தும் கை கூடும்.

மன் மனம் எங்குண்டு , வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை , வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே , மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.
             (திருமந்திரம் 620)
அவ்வாறு மனதையும் , பிராணனையும் ஒன்றி இணைத்தால் மனம் இறையோடு லயமாகும். இதனையே யோகம் என்பர். யோகத்தின் படிகள் எட்டாக வகுக்கப்பட்டுள்ளது.

அழியக்கூடிய உடலின் மூலக்கூறுகளை அகற்றி விட்டு அழியாத பொன் உடம்பாக மாறுவது என்பதை விஞ்ஞானக் கண்கொண்டும், மெய்ஞ்ஞானக் கண் கொண்டும், தொழில் நுட்ப அறிவு கொண்டும் காணலாம். ஆனால் அதற்கான ஆராய்ச்சி மையங்கள் இன்னும் நிறுவப்படவில்லை.

ஒளிப்பாய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்குக் குவாண்டம்தியரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அதன்மூலம் ஒளி எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பாயும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர்.

அட்டாங்க யோகம் கடந்த யோகியின் உடல், உயிர், ஆன்மா அடைந்த மாறுதலை எந்த விஞ்ஞான அளவுகோலாலும் கண்டுபிடிக்க முடியாது.

" வாரா வழிஅருளி வந்து எனக்கு மாறுஇன்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீர்ஆர்
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
           (திருமந்திரம் 621)
மாணிக்கவாசகராகிய யோகி தான் பெற்ற அனுபவம் பற்றி விளக்குகின்றார்.சிந்தை மேய ஒருத்தன் ஒளி பெருக்கினான். அந்த ஒளியைப் பெற்றுக்கொண்ட மாணிக்கவாசகர் குவாண்டம் பாய்ச்சலில் சீவஜோதியினைச் சிவஜோதியில் கரைத்து ஒளிமயமானார்.

பரம்பொருளை அடைய முனையும் மனது தனக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பையும், தான் பரம்பொருளோடு உறவாடுவதையும் பேச்சிலும், எழுத்திலும் வடிக்க இயலாது. ஆனால் மனமும் இறந்து,மொழியும் இறந்து அந்தப் பரம்பொருளுடன் கலந்து போகும்போது எதைக்கொண்டு எதை வர்ணிப்பது!

"சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
எந்த வகையாலே எய்தும் பராபரமே"
         ( தாயுமானவர்)

என்று சிந்தை சிதைந்து, மொழியும் உணர்வுகளும் சிதைந்து, சிவமயமே ஆன நிலையே யோகத்தின் நிறை நிலையாகும்.