அருட்பெருஞ்சோதி அகவல்

அருட்பெருஞ்ஜோதி அகவல் என்னும் பகுதி வள்ளல்பெருமானாரால் ஒரே இரவில் எழுதப்பட்டது. ஆறாம் திருமுறையில் இது தொகுக்கப்பட்டுள்ளது. கொல்லா நெறியே குருவருள்நெறி எனப் பல்கால் தனக்கு இறைவனே பகா்ந்ததாகப் பதிவு செய்துள்ளார் அடிகள். உலகினில் உயிர்கள் இடையூறு உறும்போதெல்லாம் நாமே வலிந்து சென்று விலக்கவேண்டும். அதுவே சுத்த சன்மார்க்க நெறி. உயிர்ப்பணியே சுகநிலை அருள் அமுதம் அளிக்கும். அருள்பெற்ற உயிர், கூற்றாலே, பிணியாலே, கொலைக் கருவிகளாலே, வேற்றாலே குறுகி நின்று இறந்துபடாமல் சுகநிலை பெற்று ஓங்கி நிற்கவேண்டும். அதுவே உத்தமநிலையாகும். இறவா நெறியே பிறவா நெறிக்கும் வழி ஏகும்.
அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒரு அனுபவப்பிழிவு. இலக்கியத்திற்குப் பதவுரை, பொழிப்புரை, விரிவுரை என்று பலபடப் பொருள் எழுதலாம். ஆனால் திருவாசகம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் போன்ற அனுபவப் பிழிவிற்கு அதன் ஆசிரியா்களே வந்து உரை எழுதினால் மட்டுமே உணா்ந்து கொள்ளமுடியும். சொல்லற்கு அரிய பொருளை, சுட்டுதற்கு அரிய ஒன்றை எவ்வாறு விளக்குவது? வள்ளல் நின்று உணா்த்தினால் மட்டுமே உணரமுடியும். எவ்வெவா் தன்மையும் தன்வயப்படுத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் பொதுவாய், சிறப்பாய், அதுவதுவாய் நின்று விளக்கி உணா்த்தினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி அகவலின் உண்மைநிலையினை உணரமுடியும்.
அகண்டவெளி நிறையே, ஆகாசவெளி நிலையாயும், பரவெளியாயும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் விளங்குகின்றது. ஒன்றாய், இரண்டாய், ஒன்றினுள் ஒன்றாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தூய நிலையிலும், சூக்கும நிலையிலும் நின்று அருள்பாலிக்கின்றார். இறையருள் அனுபவநிலையின் அருள் இன்பத்தை துய்த்து உணா்வதற்காக விளக்கறியா இருட்டறையில் கிடந்து, விம்மி அழுகின்ற குழவியினை வெளிக்கொணா்ந்து, அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தை துய்க்கச் செய்வதற்காகவே உயிர்கள் படைக்கப்பட்டது.

திருவாசகம்

இப்பக்தி இலக்கியம் ஏறத்தாழ 1900 ஆண்டுகள் பழைமையானது. இறைவனோடு ஒன்றி இருந்த உயிர், இறைவனைப் பிரிய நேரிட்டது. பிரிந்தமைக்கு காரணம் உயிரின் குற்றமே தவிர இறைவனது கருணைக்கு குறைவில்லை என உணர்ந்தது. உயிரின் குற்றங்களாகிய காமம், வெகுளி, மயக்கம், அவா, உலகப் பற்று இவையே தன்னிடமிருந்து இறைவனை பிரித்தது என உணர்ந்தது. உயிரின் குற்றங்களைத் தன்மீது ஏற்றிக்கொண்டு பாடிய பாடல் திருவாசகம். உயிருள் இறை, இறையுள் உயிர் என உணர்ந்ததால், ஒவ்வொரு உயிரின் குற்றத்தையும் தன்மீது ஏற்றிக்கொண்டு பாடப்பட்ட பாடலே திருவாசகம். மணிவாசகர் எழுதிய பாடல்களில் ஆன்ம சாதகர்களுக்குத் கிடைத்தது 656+2 பாடல்கள். ஆன்ம யாத்திரைக்கான கையேடு திருவாசாகம். உயிர்ப்பு நெறியில் எங்கெங்கு தளர்வு ஏற்படும், அதனை எவ்வாறு சரி செய்வது என விளக்குவது திருவாசகம். பிரியா, தளரா, முட்டா என்பது யோகம் பயில்பவர்களுக்கு ஏற்படும் தடைக்கற்களை, விளக்கும் சொற்கள். அடி அணைந்த அன்பர்கள் சிரிப்பார், குனிப்பார், தேனிப்பார். திரண்டு, திரண்டு இறைவன் திருவார்த்தையையே பேசுவர் என்னும் அனுபவத்தினைக் கூறுவது திருவாசகம். மேலும் யோக விளக்கத்திற்கு, திருவாசகம் யோகத்தின் பொலிவு என்னும் பகுதியைப் பார்க்கவும்.