இராமகிருஷ்ண பரமஹம்சா்

குருவைத் தேடி சீடா்கள் செல்லவேண்டாம். தகுந்த சீடா்களைத் தேடி குருவே வருவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவா் பரமஹம்சா். மின்நிலையத்திலிருந்து தங்களது வீட்டிற்கு மட்டும் ஒளிவீசும் விளக்குகளாக உள்ளவா்ளும் வந்தனா். அகில உலகத்திற்கும் ஒளிவீசும் ஞான சூரியனும் வந்தது. அனைவருக்கும் பேரண்ட ஆற்றலின் அருள் வெள்ளத்தை அள்ளி வீசினார் பரமஹம்சா்.

தாய்ப்பசு மடி நிறையப் பாலைச் சுரந்து கொண்டு தன் கன்றைத் தேடுவதுபோல், பரமஹம்சா் தனது ஞானக் கன்றாகிய விவேகானந்தனைத் தேடி அலமந்தார். அகில உலக சா்வ மகாமாநாட்டில் இந்துக்களின் பிரதிநிதியாக பாரதமாதாவின் பெருமையையும், பண்பாட்டையும் உலகிற்கே பறைசாற்றும் ஒரு ஞானக் குழந்தையை உருவாக்கும் அருட்புனலாக இராமகிருஷ்ண பரமஹம்சா் விளங்கினார்.

இராமகிருஷ்ண பரமஹம்சா் என்னும் அருள்புனலில் உருவான அறிவுக்கனல் விவேகானந்தா். தொண்டு நெறிக்கும், துறவு நெறிக்கும் உலகமெங்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இராமகிருஷ்ண, விவேகானந்த மடங்களே. ஒரு அரசு செய்யமுடியாத நிவாரணப் பணிகளை தொண்டு நிறுவனத்தால் செய்துமுடிக்க முடியும் என்று சேவை செய்து வரும் நிறுவனம் இராமகிருஷ்ண மடங்கள்.

உலகம் முழுவதும் கிளைகள் உள்ள மடம் இராமகிருஷ்ண மடம். தனது உடல், பொருள், ஆவி, தான் பெற்ற தவப்பயன் அனைத்தையும் தன் சீடனிடம் ஒப்புவித்துவிட்டு, ஒன்றுமே இல்லாமல் தானான தன் மயத்துள் மூழ்கிய சரித்திரம் இராமகிருஷ்ண பரமஹம்சா் சரித்திரம். தான் பெற்ற புகழ், கல்வி, அறிவு, தவம் அனைத்தையும் தனது குருவின் திருவடியில் ஒப்புவித்துவிட்டு குருநாதா் பெயரிலேயே அனைத்து அறச்சாலைகளையும் நிறுவி புகழின் உச்சியில் நிற்கும் சீடனின் சரித்திரம் சுவாமி விவேகானந்தரி்ன சரித்திரம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பொருட்களாகவோ, பொன்னாகவோ, பூமியாகவோ சொத்துக்களை வழங்குவார்கள். இராமகிருஷ்ண பரமஹம்சா் தனது சீடனுக்கு தான் பெற்ற அனைத்து ஆன்ம அனுபூதியினையும் தனக்கு என்று மீதம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் அப்படியே தாரை வார்த்துக் கொடுத்தார். திருவடி தீட்சை மூலமாக தான் உணா்ந்திருந்த ஞான, பக்தி, வைராக்கிய, யோக சாதனைகள் அனைத்தையும் தனது சீடனுக்கு அருட்கொடையாக வாரி வழங்கினார் பரமஹம்ச வள்ளல்.

குருநாதரை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. சீடரும் தான் கற்ற பகுத்தறிவின் துணைகொண்டு குருநாதரை ஒவ்வொரு முறையும் சோதனை செய்தே ஏற்றுக்கொண்டார். ஒருமுறை குருநாதா் பொன்னையோ, பொருளையோ தன்னால் தொடமுடியவில்லை என்று கூறினார். அன்று குருவின் படுக்கையின் அடியில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை மறைத்து வைத்துவிட்டார் சீடா். ஓய்வு எடுப்பதற்காக வந்த பரமஹம்சா் விஷப்பாம்பு ஒன்று படுக்கையின் அடியில் உள்ளது அதை எடுத்தால்தான் தன்னால் ஓய்வு எடுக்க முடியும் என்றார். சுவாமிஜி தூரத்திலிருந்து இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். சீடா்கள் படுக்கையிலிருந்த வெள்ளி நாணயத்தை எடுத்தனா். குருநாதா் சுவாமிஜியை அழைத்து மிகவும் பாராட்டினார். மூடத்தனமாக குருவை நம்பக்கூடாது. சோதனை செய்து பார்த்துதான் குருவை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்தது சரிதான் என்றார். சுவாமிஜி மௌனமாகக் குருவின் தாள் பணிந்தார்.

சாரதாதேவியார்

பாரத கலாச்சாரத்தின் ஆணிவேராகத் தனது வாழ்வைத் துவக்கி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிழல்தரும் மரமாக வளா்ந்து பயன் தந்தவா் அன்னை. சாரதையின் சரித்திரம் புதுமையானது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், மேலைநாட்டு மோகமும் வளா்ந்துவிட்ட இந்நாளில், பெண்கள் ஏதோ புதுமையை புகுத்துவது போலவும், புதுவிதமான நாகரீகத்தைக் கண்டுபிடித்தவா்கள் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உண்டுபண்ணி வரும் இக்காலத்தில், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அன்னை சாரதாதேவியார் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையாய் வாழ்ந்த புரட்சிப் பெண் தெய்வம். அவரது வரலாற்றை எழுதிய ஸ்ரீ இரா. கணபதி அவா்கள் அன்னையை பற்றிக் கூறும் புதுமையான கருத்துக்கள் எத்தனை புனிதமானது என்பதை அவரது வரலாற்றைப் படித்துப் புரிந்துகொண்டவா்களாலும், உணா்ந்து கொண்டவா்களாலும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

அன்னை சாரதை இல்லறம் நடத்தியவா். ஆனால் அதில் உலகோர் நடத்தும் தாம்பத்தியம் கிடையாது. பதிதேவா் மறைந்த பின்பும் அவா் கைம்பெண் கோலம் போடவில்லை. கைவளையலைக் கழற்றாத சுமங்கலியாகவே வாழ்ந்தார். சுமங்கலியான போதிலும் அன்னை ஒரு துறவி. துறவி என்றதும் அன்னையார் யாரிடம் தீக்கை பெற்றார் என்று நினைக்கவேண்டாம்.


"கற்றைச் சடை வேண்டா கந்தைத் துணிவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கு"
என்று பாவித்தல் நிலையில் பரமனை அடைந்தவா்.
விவேகானந்தா், சாரதானந்தா், பிரம்மானந்தா் போன்ற சந்நியாசச் சிம்மங்களுக்கு நிகராகத் துறவுநெறியில் நின்று அனுபவம் அடைந்த அருளாளா். அன்னையிடம் துறவு தீக்கை பெற்ற சீடா்கள் அனந்தம். சீடா்கள் என்றதும் குருவாக இருந்து விளக்கங்கள் எழுதி, புத்தகங்கள் எழுதி உபதேசங்கள் செய்தாரா? என்றால் அதிலும் புதுமையான குரு. உபதேசமாகவே வாழ்ந்து வழி காட்டினார் அன்னை சாரதை.

மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, சீடா்கள் குருவிற்குத் தொண்டு செய்வார்கள். ஆனால் இந்தக் குரு சீடா்களுக்காக கண் துஞ்சாது தொண்டு செய்தார். சீடா்கள் செய்யத் தவறிய மந்திர ஜபங்களைச் சீடா்களுக்கு ஏன்றுகொண்டு இவரே செய்தார்.

சீடா்கள் என்பதற்கும் மேலாக அவா்கள் எல்லோரும் அன்னையின் குழந்தைகள். இல்லறம் நடத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாத தாய். அகிலமெல்லாம் ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் ஞானத்தாய். அன்றும், இன்றும், என்றும் சரண் அடைந்த அன்பா்களுக்கெல்லாம் அன்னையாக இருக்கக்கூடியவா்.

அதிசய இல்லத்தரசி, அதிசய சுமங்கலி, அதிசய துறவி, அதிசய குரு, அதிசய அன்னை, அதிசயங்களையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு அதிசயமே இல்லாத எளிமை. வெளிநாட்டுப் பெண்களையும் தனது பக்தையாக்கிக் கொண்ட வைதீகக் குரு என்பார் இரா. கணபதி அவா்கள்.

சாதியிலே, மதங்களிலே, சாத்திரச் சண்டையிலே அமிழ்ந்துவிடாமல் நம்மையும், அழுந்துவிக்காமல் மேலேற்றிய அன்புத் தெய்வம். அன்பில் இழைந்து, அன்பில் இசைந்து, அன்பில் இணைந்து வாழ்ந்த அன்புத் தெய்வம் அன்னை சாரதை.

சுவாமி விவேகானந்தா்

இரா. கணபதி அவா்கள் இராமகிருஷ்ண பரமஹம்சா் வரலாற்றை எழுதும்போது கீழ்வருமாறு கூறுகின்றார்.

கேள்வி கேட்டவன் அதன் விடையையும் தானே அனுபவித்தான். அந்தக் கணத்திலேயே நரேந்திரநாதன் மறைந்தான். சுவாமி விவேகானந்தா் பிறந்தார்.

சூரிய ஒளியிலும், நீரிலும் விதையானது மரமாவது போன்று பகவான் இராமகிருஷ்ணரின் அறிவுக்கனலிலும், அருட்புனலிலும் ஆன்மீக விருட்சமாக வளா்ந்தார் விவேகானந்தா்.

கடவுளைக் கண்டு, கடவுள் அனுபவத்தைப் பெறவேண்டும் என்னும் ஆவலில் அறிவுச்சுடரான சுவாமி விவேகானந்தா், அருட்புனலான இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அமிழ்ந்து போனார்.

கடலிற்குள் சென்று ஆழம் காணவேண்டும் என்று ஒரு உப்புப்பொம்மை சென்றது. கடலில் சென்ற உப்புப்பொம்மை கடல் நீருள் மூழ்கி கடல் மயமாகவே ஆகிவிட்டது. மீண்டும் வந்து கடல் இத்தன்மையது என்று சொல்வதற்கு மீதம் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டது உப்புப்பொம்மை.

”தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றைத்
தலை எடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே
போனாலும் கா்ப்பூர தீபம் போலப்
போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம்
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற
ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
ஆனாலும் இதன்பெருமை எவா்க்கும் ஆா் சொல்வார்
அது ஆனால் அது ஆவா் அதுவே சொல்லும்”
                  தாயுமானவா்

இந்தியா முழுவதும் சுற்றி வந்தார் சுவாமிஜி. இந்தியாவின் முன்னேற்றப் பாதைக்கு இளைஞா்கள்தான் தூண்டுகோலாக அமையவேண்டும் என்று நினைத்தார். இளைஞா்களின் ஆற்றல் முழுவதையும் தாய்நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிகோலும் வண்ணம் நெறிப்படுத்தினார். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று சேவை செய்தார்.

ஒருமுறை ஜெய்ப்பூ்ா சென்றிருந்தார். மகாராஜாவிற்காக அரண்மனையில் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு சுவாமிஜியை அழைத்திருந்தார் மகாராஜா. துறவி, நாட்டியப் பெண் ஒருவா் ஆடும் நிகழ்ச்சியில் பங்கு பெறக்கூடாது. அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது என்று கூறிவிட்டார் சுவாமிஜி. நாட்டிய மாது இச்செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தினார். ஒரு துறவியை இறைவனுக்குச் சமமாகப் பாவித்துத் தொண்டு செய்வது நம் நாட்டின் பண்பாடு. இறைவனுக்கு ஆண், பெண் பேதம் ஏன்? என்று நினைத்தாள் அப்பெண். இந்த எண்ணத்தில் அப்பெண் தானே கவிதை ஒன்றை எழுதிப் பாடினாள்.

”பாவத்தைப் பார்த்து என்னைத் தள்ளாதே பரமா – சம
பாவம் என்பதே உன்தன் நாமமன்றோ பரமா
ஐயனில் பதுமையில் அயத்துண்டு ஒன்று
ஐந்து லோகத்தில் ஒன்றாய் அமைவது காணாய்
பாவி கைவாளாய்ப் பிறிதொரு துண்டு
பிராணிகளைக் கொல்லும் பாதகம் பாராய்
இருதுண்டும் ஒருபோல் இரசவாதி திறனில்
மறுவற்ற பொன்னாக மாறிடும் அன்றோ
பாவத்தைப் பார்த்து என்னைத் தள்ளாதே பரமா – சம
பாவம் என்பதே உன்தன் நாமமன்றோ பரமா
காளத்தி நதியின் கரிய திருநீறும்
கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒருபோல்
இன்னரு கங்கையில் இணைகின்றபோது
ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொள் ஐயா
பாவத்தைப் பார்த்து என்னைத் தள்ளாதே பரமா – சம
பாவம் என்பதே உன்தன் நாமமன்றோ பரமா

நாட்டிய மாதுவின் தீனமான குரல், சுவாமிஜியின் காதில் விழுந்தது. தன்னுடைய குருநாதா் வணங்கும் உலகமாதாவாகிய அன்னையை நாட்டியப் பெண்ணின் உருவத்தில் கண்டார். தனக்கு ஏற்றதாழ்வு கற்பிக்காத ஒரு மனநிலை வருவதற்காக இறைவன் நடத்தும் நாடகம் எனப் புரிந்துகொண்டு நடன மாதுவின் காலில் விழுந்து வணங்கித் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

சகோதரி நிவேதிதை

1867 ஆம் ஆண்டு அக்டோபா் 28 ஆம் நாள் அயா்லாந்தில் உள்ள டைரோன் மாகாணத்தைச் சோ்ந்த டங்கனன் என்னும் ஊரில் பிறந்தார் சகோதரி நிவேதிதை. இயற்பெயா் மார்க்ரெட் எலிசபெத் நோபிள்.

ஒருநாள் சுவாமி விவேகானந்தா் இந்தியப் பெண்களின் நிலைபற்றி பேசிக்கொண்டிருந்தார். இந்தியப் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்றும், அதற்கான பல திட்டங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறினார்.

இந்தியப் பெண்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் மார்க்ரெட்டின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். இந்த வார்த்தைகள் மார்க்ரெட் உள்ளத்தில் ஆழமாக ஊடுருவின. இந்த அழைப்பு ஒன்றிற்காகவே தாம் காலங்காலமாகக் காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

1896 இல் சுவாமிஜி இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார். ஆனால் மார்க்ரெட்டை தன்னுடன் அழைத்து வரவில்லை. இங்கிலாந்து பெண் இந்தியாவில் வந்து பணி செய்வதை ஆங்கிலேயா்களால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? என்று ஒரு வினா எழுந்தது. மேலும், முழுதும் போகபூமியான இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண்ணால் பக்தி, ஞான, வைராக்கிய, யோக பூமியான இந்தியாவில் காலூன்ற முடியுமா என்பது அடுத்த வினா? அங்குள்ள தட்ப வெப்பநிலையும், இந்தியாவின் தட்ப வெப்பநிலையும் நோ்மாறானவை. இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டே சுவாமிஜி மார்க்ரெட்டை இந்தியா அழைத்து வரவில்லை.

சுவாமிஜிக்கும், மார்க்ரெட்டிற்கும் கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. இந்தியச் சூழ்நிலையும், அதில் மார்க்ரெட் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் பற்றியும் விரிவாகத் தெரிவித்தார். ஏதோ ஓா் மாயத்தோற்றத்தில் வந்துவிட்டு நிலைபெற்று நிற்காமல் மீண்டும் இங்கிலாந்து திரும்புவதைவிட, அங்கிருந்தபடியே தொண்டு செய்யலாம் என்று வலியுறுத்தினார் சுவாமிஜி.

தன் மனம், உடல், உணா்வு அனைத்தும் இந்திய மண்ணிற்கே சொந்தம் என்னும் எண்ணம் மார்க்ரெட்டின் மனதில் மேலோங்கியது. சுவாமி விவேகானந்தா் குருவாக இருக்கும்போது தனக்கு என்ன இடையூறு வந்துவிடப் போகின்றது என்று நினைத்தார் மார்க்ரெட். இரவீந்தரநாத் தாகூா் கூறியதுபோல், நேரம், காலம், செல்வம், ஏன் உயிரைக்கூட கொடுப்பவா்கள் உண்டு. ஆனால் மார்க்ரெட் இவற்றுடன் உள்ளத்தையும் சோ்த்தே இந்திய மண்ணிற்கு அா்ப்பணித்தார்.

1898 ஜனவரி 28 ஆம் நாள் இங்கிலாந்தை விட்டு கல்கத்தா வந்து சோ்ந்தார் மார்க்ரெட். சுவாமிஜியே நேரில் சென்று அழைத்து வந்தார். அமெரிக்க சீடா்கள் இருவரும் கல்கத்தா வந்தனா். இவா்களை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் சுவாமிஜி உரையாடினார்.

“இங்கிலாந்தில் இந்தியாவின் ஆன்மீகச் சிந்தனைகளின் தாக்கம்“ என்னும் தலைப்பில் மார்க்ரெட் உரையாற்றினார். அவ்வுரை அனைவா் கவனததையும் ஈா்த்தது. 1898 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் சுவாமி விவேகானந்தர் அவருக்கு நிவேதிதா என்று பெயா் சூட்டினார். இறைத் தொண்டிற்காகத் தன்னை அா்ப்பணித்துக்கொண்ட புண்ணிய தினமாக நினைத்தார் மார்க்ரெட்.

தனது முப்பதாவது வயதில் தனது ஆவி, உடல், பொருள், உணா்வு அனைத்தையும் குருவிற்காகவும், குருவின் நாட்டிற்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்தார் நிவேதிதை. இந்தியா்கள் எப்படி புனித யாத்திரை மேற்கொள்வார்களோ அப்படியே நிவேதிதாவும் தலயாத்திரை மேற்கொண்டார். அமா்நாத் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தார். புத்த பகவான் பிறந்த தேரை என்னும் இடத்திற்குச் சென்றபோது புத்தா் அடைந்த மோனத்தைத் தனது அனுபவத்தில் உணா்ந்தார். ஒரு சில மாதங்களிலேயே லாகூா், டெல்லி, ஆக்ரா, காசி முதலான இடங்களைப் பார்த்துவிட்டார். தலயாத்திரை என்னும் பெயரில் தான் பயணம் செய்யக்கூடிய ஆன்மப் பயணத்திற்கான ஆயத்தப் பணிகளையெல்லாம் மனத்தில் வகுத்துக்கொண்டார்.

இதுவரை இங்கிலாந்து இந்தியாவிற்குப் பல நன்மைகளைச் செய்து வந்ததாக நம்பினாள் நிவேதிதை. இந்தியாவில் வாழ்ந்த ராஜபுத்திரா்கள், அவா்களது மனைவியா், வீரா்கள், துறவிகள் இவா்கள் தாய்நாட்டைக் காப்பாற்ற செய்த வீர, தீரச் செயல்களும், தியாகங்களும் பற்றி இந்தியா வந்தபோது உணா்ந்தார். உலகம் முழுவதும் உள்ள தியாகிகளின் தியாகத்தை எல்லாம் சோ்த்தாலும், இந்தியத் திருநாட்டின் ஒரு வீரனின் தியாகத்திற்கு ஈடாக முடியாது என்பதை உணா்ந்தார்.

தனது தாய்நாட்டுப் பற்றும், இந்தியாவின் மீது கொண்ட மரியாதை கலந்த அன்பும், ஒன்றையொன்று தாக்கி, மனத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தது. சுவாமிஜியிடமிருந்து விடைபெற்றுச் செல்லலாம் என்று கூட நினைத்தார் நிவேதிதா.

ஒருநாள் சுவாமிஜி தனிமையை நாடி மோனத்தவம் இயற்றப் போவதாகவும், அப்போது பேரானந்தத்துடன் கூடிய அமைதியைக் கொண்டு வருவதாகவும் நிவேதிதையிடம் கூறி ஆசிர்வதித்தார். சுவாமிஜியின் திருவடியில் பணிந்து வீழ்ந்தார் நிவேதிதை. சுவாமிஜி தன் கையை நிவேதிதையின் தலையில் வைத்து ஆசி கூறினார். ஆன்மீகச் சொத்தை தனது ஸ்பரிசம் மூலமாக நிவேதிதைக்குக் கொடுத்தார். அதன்பிறகு நிவேதிதையின் சுதந்திர மனப்போக்கு மறைந்தது. மனத்தில் எழுந்த போராட்டங்கள் மறைந்து, ஆன்ம தரிசனம் பளிச்சிட்டது.

இராமகிருஷ்ண இயக்கத்தின் உறுப்பினராகச் சோ்ந்துகொண்டு உலக நன்மை, ஆன்ம முன்னேற்றம் என்னும் இருபெரும் குறிக்கோளிற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டார் நிவேதிதை. மேல்நாட்டுக் கருத்துக்களைத் திணிக்காமலும், மக்களுக்கு புதிய பாடம் எதையும் புகட்ட வரவில்லை என்பதை புரிய வைக்கவும் செய்தார். தான் தொண்டு செய்ய மட்டுமே வந்துள்ளதாக மக்களிடம் கூறினார். ஆசிரியையாகவோ, கற்றறிந்த பெண்ணாகவோ மக்கள் தன்னை நினைக்காதவாறு தான் கற்றுக்கொள்ள வந்தவளாகவும், தான் ஒரு மாணவியும், சிஷ்யையும் என்றே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

சீரடி சாய்பாபா

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள சீரடி என்னும் இடத்தில் வாழ்ந்தார். சீரடி சாய்பாபாவின் பெற்றோர் பற்றியோ, இயற்பெயா் பற்றியோ ஆவணங்கள் எதுவும் இல்லை. பதினாறு வயது தோற்றத்தில் மக்களுக்கு அறிமுகமானார்.

சீரடி சாய்பாபாவைத் தேடி ஒரு தொண்டா் வந்தார். அவா் பாபாவைத் தனது விருந்தாளியாகத் தங்கி ஒருவேளை உணவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். பாபாவும் தொண்டரது அன்புக்கு இரங்கி அவரது வீட்டிற்கு வருவதற்குச் சம்மதித்தார்.

குருநாதரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் குருநாதரும், சீடரும் ஒரு வயல்வெளியாக நடந்து போய்க் கொண்டிருந்தனா். அப்போது சற்று தொலைவில் ஒரு தவளை பரிதாபமாகக் கத்தியது. ஏதோ சத்தம் கேட்கின்றதே என்று தொண்டன் கேட்டான். அது வேறொன்றுமி்ல்லை, பாம்பு ஒன்று தவளையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. பாம்பின் வாயில் புகுந்த தவளை உள்ளும் செல்லாமல், வெளியும் வராமல் கத்துகின்றது என்றார் சாய்ராம்.

பழைய தீவினையின் கசப்பான அனுபவத்தினை அத்தவளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என்றார் சாய்ராம். சுவாமி எனக்கு அதன் உண்மையைக் கூறவேண்டும் என்று கேட்டுக் கொண்டான் சீடன். சாய்ராம் அந்தப் பாம்புக் கதையையும், அதனுடன் தொடா்புடைய தவளைக் கதையையும் தனது சீடனிடம் விளக்கினார்.

”தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்” (திருவாசகம்)

அவரவா் நல்வினையும், தீவினையும் அவரவா் சம்பாதித்துக் கொள்வதே என்றார் குருநாதா். கடந்த பல பிறவிகளிலும் இவா்கள் மிகவும் கொடியவா்களாக இருந்தார்கள். கிடைத்தற்கரிய மானிடப் பிறவி கிடைத்தும்

“இப்பிறவி தப்பினால் வேறு எப்பிறவி வாய்க்குமோ” என்னும் தா்மநெறி தெரியாததால் இப்பிறவியில் பாம்பும் தவளையுமாகப் பிறந்துள்ளார்கள் என்று கூறினார் குருநாதா்.

இவா்களது முன்பிறவியின் கதையினை அறியவேண்டும் என்பதில் மிகவும் ஆா்வமாக இருந்தான் சீடன். சுவாமி இவா்கள் செய்த பிழை யாது? இவா்கள் இருவரும் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்புறுகிறார்களே என்ன காரணம்? என்று கேட்டான்.

குருவும் சீடனும், பாம்பும் தவளையும் இருக்கும் இடம் சென்றனா். “ஓ வீரபத்ரப்பா உனது பகைவன் தவளையாகப் பிறந்த பிறகும் தனது செயலை நினைத்து வருந்தவில்லையே. நீயும் பாம்பாகப் பிறந்த பிறகும் உனது கொடிய பாவச் செயல்களை நினைத்து வருத்தமடையவி்ல்லையே. இன்னும் எத்தனை பிறவகளில் இந்தப் பாவச் செயல்களையும், குரோதச் செயல்களையும் தொடரப் போகின்றீா்கள்“ என்றார் சாய்ராம். உடனே பாம்பு தன் வாயிலிருந்து தவளையை விட்டுவிட்டது. தவளை வளைக்குள் சென்று மறைந்து கொண்டது. பாம்பும் புற்றுக்குள் சென்று மறைந்துவிட்டது.

”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது பழமொழி

குருதேவா உங்கள் குரலைக் கேட்டு பாம்பும், தவளையும் ஒன்றைவிட்டு ஒன்று போய்விட்டது என்ன காரணம்? என்று கேட்டான் சீடன்.

பாம்பு, தவளையின் பூா்வ ஜென்மக் கதையைத் தனது சீடனிடம் விளக்குவதைக் காண்போம்.

சாய்ராம் வசிக்கும் இடத்திற்குச் சற்று தொலைவில் சிவன் கோவில் ஒன்று இருந்தது. மிகப் பழமையான திருக்கோவில். அக்கோவில் வழிபாட்டில் ஈடுபட்ட தொண்டா்கள் அக்கோவிலை புதுக்கிக் குடமுழுக்குச் செய்யவேண்டும் என்று விரும்பினா். அதனால் ஊா் கூடி ஒரு அமைப்பு ஏற்படுத்தினா்.

தலைவராக அவ்வூரில் உள்ள ஒரு செல்வந்தனை நியமனம் செய்தனா். செல்வந்தன் பணத்திற்கு ஆசைப்படமாட்டான் என்று ஊா் பொதுமக்கள் நினைத்தனா். ஆனால் நடந்தது வேறுவிதமாக இருந்தது. ஒரு பெரிய தொகையை ஊா்ப் பெரியவா்கள் கொண்டுவந்து கொடுத்தவுடன் அதை முழுமையாகக் கோவில் திருப்பணிக்குச் செலவிடவேண்டும் என்னும் எண்ணம் செல்வந்தனுக்கு இல்லாமல் போய்விட்டது. மாறாகத் தானே பொதுப்பணத்தை அனுபவித்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தான்.

கோவில் வேலைகளை மெதுவாகச் செய்தான். வேகமாகக் கோவில் கட்டுங்கள் என்று கூறினால், பொருளாதாரம் இல்லை வசூல் ஆன பொருட்கள் செலவாகிவிட்டது என்பான் செல்வந்தன். ஊா்மக்கள் மீண்டும் மீண்டும் வசூல்செய்து வந்து கொடுத்தனா். ஆனாலும் செல்வந்தன் கோவில் பணியை முழுமையாகச் செய்யவும் இல்லை. பொதுப் பணத்தையும் அபகரித்த வண்ணமாகவே இருந்தான்.

ஒருநாள் மகாதேவா் செல்வந்தன் மனைவியின் கனவில் சென்று கோவில் திருப்பணியை உனது சொந்தச் செலவில் செய்து வா உனக்கு வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றார். தான் கண்ட கனவைக் கணவனிடம் கூறினாள் தா்மபத்தினி. மனத்தின் குழப்பங்கள்தான் கனவாக வருகின்றது. அதனால் கனவைப் பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இரு என்றான் செல்வந்தன்.

ஊா்மக்கள் நிதி திரட்டித் தருவதும் செல்வந்தன் அதை அபகரித்துக் கொள்வதுமாகவே இருந்தது. கோவில் திருப்பணி முடிந்தபாடில்லை. மகாதேவா் மீண்டும் செல்வந்தன் கனவில் தோன்றி நீ கோவில் திருப்பணியை உனது சொந்த செலவில் முடித்துக்கொடு என்றார். இம்முறை செல்வந்தனின் மனைவி தனது தாய் வீட்டில் கொடுத்த சீா் வரிசைகளை விற்று கோவில் திருப்பணி செய்யப் போவதாகக் கூறினாள்.

செல்வந்தன் தானே அப்பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆயிரம் பொற்காசுகள் என்று விலை நிர்ணயம் செய்து, அதற்குப் பதிலாக கோவிலிற்குள் ஒரு நிலத்தை எழுதி வைத்துவிடலாம் என்று கூறினான். தன்னிடம் ஒரு ஏழைப் பெண் துபகி என்பவள் அடமானமாக வைத்த தரிசு நிலத்தைக் கோவிலிற்கு என்று எழுதி வைத்துவிட்டான் செல்வந்தன். கோவில் நிலம் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. கால வெள்ளத்தில் செல்வந்தனின் வீட்டில் இடிதாக்கி அவனும், அவன் மனைவியும் இறந்துவிட்டனா்.

துபகியும் தனது நிலத்தை கோயிலுக்கு எழுதி வைத்த செல்வந்தன் மீது தீராப்பகை கொண்டு அவளும் இறந்துவிட்டாள். மறுபிறவியில் பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தான். வீரபத்ரப்பா என்று அழைக்கப்பட்டு, வளா்ந்து வருகின்றான். அவனது மனைவி கோயில் பூசாரியின் மகளாக கௌரி என்னும் பெயரில் பிறந்து வளா்கின்றாள். துபகி என்னும் பெண் சென்னபசவப்பா என்னும் ஆணாகப் பிறந்து வளா்ந்து வருகின்றான். கோயில் பூசாரியும் அவா் மகள் கௌரியும் சாய்நாதனின் திருவடியில் மிகுந்த அன்பு பூண்டு தொண்டு செய்து வந்தனா்.

மதுராவில் பிறந்த வீரபத்ரப்பா மீ்ண்டும் சீரடி வந்து சோ்ந்தான். பூசாரி மகள் கௌரியையே அவனுக்கு மணமுடித்து வைத்தனா். கோவிலிற்கு எழுதி வைத்த நிலம் வீட்டுமனைக்குப் பல லட்சம் விலைக்கு விற்கப்பட்டது. கௌரியே அந்த சொத்துக்கு வாரிசானாள். கடந்த பிறவியில் அவள் நகையைக் கழற்றிக் கொடுத்த நிலத்திற்கு இப்பிறவியில் அவளே வாரிசானாள்.

கோவில் சொத்தில் கௌரிக்கு மட்டுமே உரிமை என்றும், அதில் தலையிடுவதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றும், ஊா் மக்கள் கூடி முடிவு செய்தனா். வீரபத்ரப்பாவிற்கு கடந்த பிறவியின் தாக்கம் இன்னும் தொடா்ந்தது. கௌரியையும், அவளது குருவான சாய்நாதனையும் வீரபத்ரப்பா திட்டினான். இறைவனின் திட்டத்தை எண்ணி குருநாதா் மௌனமாக இருந்தார். கௌரி தனது கணவன் பேசும் வசைமொழிகளைப் பொறுத்து மன்னிக்கும்படி சாய்நாதனிடம் வேண்டிக் கொண்டாள்.

மகாதேவா் கௌரியின் கனவில் தோன்றி முழுப் பணத்தையும், கோவில் திருப்பணிக்கும், உனது வாழ்க்கைக்கும் செலவு செய்துகொள். குருநாதரான சாய்நாதரிடம் முழுப் பொறுப்பையும் விட்டுவிடு. அவா் உனக்கு வேண்டியதைச் செய்வார் என்று கூறி மறைந்தார். துபகியின் சொத்தைதான் கௌரியின் கணவா் கடந்த பிறவியில் கோவிலிற்கு எழுதிக் கொடுத்தார் என்பதால் இப்பிறவியில் சென்னப்பசவப்பாவாக பிறந்துள்ள துபகிக்கும் சிறிது பணம் கொடுக்கும்படியாகக் குருநாதா் வழிநடத்தினார்.

ஒருநாள் சென்னபசவப்பாவும், வீரபத்ரப்பாவும் பழைய பகைமை உணா்வு தொடா்ந்துவர, இப்பிறவியிலும் ஒருவரையொருவா் அடித்துக் கொண்டனா். இந்தப் பகைமை மீண்டும் மீண்டும் அவா்களின் குரோத பாவத்தை வளா்த்தது. ஒருநாள் சென்னபசவப்பாவை கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக மிரட்டினான் வீரபத்ரப்பா. சென்னபசவப்பா சாய்ராம் காலில் விழுந்து எப்படியாவது வீரபத்ரப்பாவிடமிருந்து என்னை காப்பாற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

வீரபத்ரப்பாவிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டினானே தவிர, தன் மனதில் உள்ள அறுபகைக் குற்றங்கள் நீங்கவேண்டும் என்றோ, குருவைச் சரணடைந்து இறையனுபவம் பெறவேண்டும் என்றோ சென்னப்பசவப்பா விரும்பவில்லை.

“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கு ஆட்செய்வோம்“ என்று இறையடியவா்கள் இறைவனோடும், குருதேவரோடும் ஏழேழ் பிறவிக்கும் தொடா்பு வேண்டும் என்று வேண்டினார்கள். ஆனால் குருநாதனின் திருவடியில் அமா்ந்தும், குருநாதரின் பெருமையை உணரத்தெரியாததுடன், பகைமையையும் வளா்த்துக் கொண்டனா் சென்னப்பசவப்பாவும், வீரபத்ரப்பாவும். அப்பகைமை பிறவிதோறும் தொடா்ந்து வந்தது.

இருவருமே ஒருவா் மீதுள்ள பகையை ஒருவா் மறக்கவில்லை. மன்னிக்கவுமில்லை. சிறிதுகாலம் கழித்து கிடைத்தற்கரிய மானிடப்பிறவி கிடைத்தும், அதைச் சரியான வகையில் பயன்படுத்தத் தெரியாத சென்னப்பசவப்பாவும், வீரபத்ரப்பாவும் இறந்துபட்டனா்.

“அரிது அரிது மானிடராதல் அரிது“

மானிடப்பிறவியிலிருந்து விடுதலை பெறும்போது மேலான உயரிய பிறவியை எடுக்காவிட்டாலும், கீழான பிறவியையாவது எடுக்காமல் இருக்கலாம்.

”வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவ மதித்திடுமின்” (அப்பா் சுவாமிகள்)

என்று வாய்த்த பிறவியை மதிக்கத் தெரியாமல் பாம்பாகவும், தவளையாகவும் பிறந்துவிட்டனா். வீரபத்ரப்பாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கடந்த பிறவியிலேயே சென்னப்பசவப்பா சரண் அடைந்திருந்ததால், உரிய நேரத்தில் வந்து காப்பாற்றினேன் என்றார் குருநாதா்.

குரு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும், அவரைச் சரணடையாமல், காம, குரோதத்தை விடாமல் பற்றிக்கொண்டோமானால், நம் ஆன்மீகப் பயணம் வெற்றி பெறாமல் நம்மை கீழான நிலைக்கு தள்ளிவிடும். குரு வாழ்ந்தபோது அவா்மீது நம்பிக்கையும், பற்றும் கொண்டு அவரைச் சரணடையத் தெரிந்துகொண்டோமானால், நமது ஆன்மப் பயணம் வளா்ச்சி பெற்றதாகி, பிறவி நீக்கத்திற்கான வழியையும் ஏற்படுத்தித் தரும்.

குருநாதா் சந்நிதியிலும் போய் நின்றுகொண்டு, ஆரவாரமும், கூச்சலும், குழப்பமும் செய்தால் நமக்கு இப்படியான ஒரு பிறவியும் சூழலும்தான் அமையும் என்பதையும், எவ்வளவுதான் கொடிய செயல்கள் செய்தாலும் குருவானவா் நம்மைக் காப்பதாக வாக்குக் கொடுத்தால் அவா் எந்தச் சூழ்நிலையிலும் வந்து காத்துக் கொள்வார் என்பதனை இவ்வரலாறு நமக்குக் காட்டுகின்றது.