5 - வாயு தாரணை
எண்ணிலியூழி உடம்பாய் இரேசிக்கில்
உண்ணிலமை பெற்றது உணர்வு (44)
பிராணாயாமத்தை முறையாகச் செய்து வருபவர்கள் காலம் கடந்து வாழ்வர். அவ்வாறுகாலம் கடந்து வாழ்பவர்களுக்கான பயிற்சியும், முயற்சியும் இடையீடு இல்லாமல்இருக்கவேண்டும். இவ்வுடம்பின் பயன் உத்தமனைக் காணல். அதற்கு நாம் பிராணாயாமத்தை முறையாக (கால வரையறை கடந்து - எண்ணிலியூழி) இரேசிக்கவேண்டும் என்றார். இத்தனை முறை, இத்தனை மணி என்று கணக்கு வைத்துக்கொள்ளாமல் வாழ்நாள் பயிற்சியாகப் பயிலவேண்டும் என வழிகாட்டுவார்.
திருவாசகத்தை எத்தனைமுறை சொல்லவேண்டும் என்பதற்கு முந்தைவினை முழுவதும் கழியும்வரை (ஓயும் வரை) கூறு என மணிவாசகர் கூறுவதுபோல் அம்மையாரும், முத்தேக சித்தியும், மரணமிலாப் பெருவாழ்வும் பெறும்வரை இப்பயிற்சியைச் செய் என வழிகாட்டுவார். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும்போது உள்நிலைமை பெற்று உணர்வு விளங்கும் என்பார்.
உணர்வு பெருகினால் ஒளி அனுபவம் கிட்டும்.‘உணர்வில் நின்று ஒருத்தன் பெருக்கும் ஒளி’ என்பார் மணிவாசகர்.
மயிர்க்கால் வழிஎல்லாம் ஆய்கின்றவாயு
உயிர்ப்பின்றி உள்ளே பதி (45)
வாசிப்பயிற்சியினைத் தொடர்ந்து பயின்று வந்தால் வாசியின் ஓட்டம் உடலிற்குள்ளேயே நடைபெறும். பூரித்தல், ரேசித்தல் வெளியே நடவாது. இப்பயிற்சியை மேல் ஓட்டமாகச் செய்தால் வாசியின் முழுப்பயனையும் அடையமுடியாது. உணர்ந்து செயல்பட்டால் வாசி உள் ஓட்டமாக ஓடும். வெளிக்காற்றை உள்ளிழுப்பதற்கு வேலையே அங்கு இல்லை. உயிர்ப்பாகிய வாசி உள்ளே பதியவேண்டும் என்பார் அன்னை. மயிர்க்கால் வழி எல்லாம் வீணாக வாயு வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்தி, வாயு பதியும்படியான பயிற்சியைச் செய்தல் வேண்டும் என்று வழிகாட்டுவார் அன்னை.
‘அமுதம் மயிர்க்கால்தோறும் தேக்கிடச் செய்தான்’
என்பது மணிவாசகம். உள்ளே உயிர்ப்பைப் பதித்தால் அது மயிர்க்கால்களைச் சுத்தி செய்து அருள் அனுபவமுறச் செய்யும் எனவும் நெறிப்படுத்துவார் அன்னை.
மேல் கீழ் நடுபக்கம் மிக்குறப் பூரித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
பாலாம் ரேசகத்தால் உட்பதிவித்து
ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே
(திருமந்திரம்)